எஸ்.ஐ பிரபு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு: ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

சென்னை: சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் குயிலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) தாதா  மணிகண்டன் (39). இந்த ஊர், தமிழகம், புதுச்சேரி எல்லையில் உள்ளது. மணிகண்டன் மீது 7 கொலை, 9 கொலை முயற்சி, 4 கடத்தல் மற்றும் கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. அதில் ஆரோவில் காவல் நிலையத்தில்  மட்டும் 20 வழக்குகள் உள்ளன. ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் அதிகம் உள்ளனர். அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தான்.  தொழில் அதிபர்களை கடத்திபணம் பறித்து வந்தான். இவனது தம்பிகள் ஏழுமலை, ஆறுமுகம் ஆகியோரும்  மணிகண்டனுடன் சேர்ந்து கொலை, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் தேடுவது தெரிந்ததும், தலைமறைவானான். ஆனாலும், மறைந்திருந்து, திட்டம்போட்டு கொடுத்து கொலை, ஆள் கடத்தல் பணம் பறித்தலில் ஈடுபட்டு,  போலீசுக்கு சவாலாக விளங்கினான்.

மணிகண்டன் பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவானான். நீதிமன்றம் அவனை ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து இவனை பிடிக்க விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி, ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு,  மற்றும் எஸ்ஐ பிரகாஷ், பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து அவனை தேடினர். விசாரணையில், தாதா மணிகண்டன் அண்ணாநகர் மேற்கு விரிவு பி செக்டார் 4வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி  இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் நேற்று இரவு அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதிக்கு மாறு வேடத்தில் வந்தனர். பின்னர் மணிகண்டன் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தனர். அந்த குடியிருப்பில்  கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி பியூலா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் தங்கி இருந்தான்.

இதனை அடுத்து போலீசார் வீட்டின் கதவை தட்டினர். அப்போது மணி கண்டன் கதவை திறந்து வெளியே வந்தான். வந்தது போலீஸ் என தெரிந்தவுடன் எஸ்ஐ பிரபுவை கத்தியால், மணிகண்டன் வெட்டினான். இதில் அவர் காயம் அடைந்து  கீழே விழுந்தார். இதனை அடுத்து எஸ்ஐ பிரகாஷ், மணிகண்டனை 2 முறை தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டன் குண்டு காயங்களுடன் கீழே சுருண்டு விழுந்தான். தகவல் அறிந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடததிற்கு  விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த தாதா மணிகண்டன், எஸ்ஐ பிரபு ஆகியோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்ததாக  டாக்டர்கள் தெரிவித்தனர். எஸ்ஐ பிரபு கொடுத்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் மனைவியை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடியால் தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் பிரபு சிகிச்சைக்காக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள  தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, உதவி ஆய்வாளர் பிரபு கொடுத்த புகாரின் பேரில், கொரட்டூர் போலீசார் மற்றொரு வழக்குபதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களால்  தாக்குதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமபத்தூர் மாஜிஸ்திரேட் வழக்கை விசாரிப்பார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார். தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்வார்கள். தொடர்ந்து கேஎம்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடி மணிகண்டன் உடலை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்வார்.  பின்னர் மணிகண்டன் உடலை பிரேச பரிசோதனை செய்து அவரது மனைவிடம் ஒப்படைப்பது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: