சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி தஹில் ரமானி, கொலீஜியத்துக்கு கோரிக்கை மனுவை அனுப்பினார். ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதன் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பினார். கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வக்கீல் கற்பகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது குடியரசு தலைவர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது, கொலீஜியத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடாமல் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு, கொலீஜியத்தில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது, நிர்வாக உத்தரவு என்பதால் உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரபாகர் குறிப்பிட்டார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவானது பட்டியலிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். கடந்த 20ம் தேதியன்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு உகா்ந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. முன்னதாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: