திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி:  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன்(76) 1970-களின் முற்பகுதியில் இந்தி திரையுலகில் நுழைந்து மிகப்பெரிய கதாநாயகனாக உயர்ந்து, பின்னர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் எனப்படும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பல ஆண்டுகாலமாக தக்கவைத்து வருகிறார். நூற்றுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசுபத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய சினிமா துறையின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மராட்டிய மாநில அரசின் விருதுகள் மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகளை பலமுறை பெற்றுள்ளார்.

முன்னதாக பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996) , இயக்குனர் பாலச்சந்தர்(2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாதா சாகேப் விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: