மொழி சிறுபான்மை பள்ளிகளில் 10ம் வகுப்பு தமிழ்தேர்வு எழுத 2022 வரை விலக்கு: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2022ம் ஆண்டு வரை  விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த  2006ம் ஆண்டு ஜூன் 12ல் கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிகளில் பயிலும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளின்போது, தமிழ்பாட தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 2015-16ம் கல்வியாண்டில் பிற மொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து  உத்தரவிட்டது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்க கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் பாடம் கற்பிக்கும், ஆசிரியர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லையோர கிராமங்களில் உள்ள மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாடம் இன்னும் முழுமையாக பயிற்றுவிக்கப்படவில்லை.

எனவே 2024 வரை விலக்களிக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். எனவே, கோரிக்கையின் அடிப்படையில், மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, அதாவது 2022 வரை தமிழ் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிடுகிறோம். அதே நேரத்தில் மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வை எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: