எம்பிபிஎஸ் சேர்க்கையில் இரட்டை இருப்பிட சான்று விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?: பரபரப்பு தகவல்கள்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் இரட்டை இருப்பிட சான்று விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் போலி ஆவணங்களை கொடுத்து அட்மிஷன் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்களில் கடும் விதிமுறைகள், உடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் விதிமுறையில் கடுமை இல்லை. பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில்  மாணவர்கள் காப்பி அடிப்பதை மாநில கல்வித்துறை கண்டுகொள்வதில்லை.

பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு ஒரு பள்ளியில் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் பிட் போட்ட சம்பவம் வெளியாகி இந்திய கல்வித்துறையை ஆட்டி படைத்தது. ஆனால் தமிழகத்தில் காப்பி அடித்து பிடிபட்டால் மாணவர்கள் தேர்வு எழுத  சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். உதாரணமாக 2016ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ரூபி ராய், முதலிடம் பெற்றது தொடர்பாக பேட்டி அளித்த போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை.  இந்நிலையில் பீகார் உயர் நீதிமன்றம் அந்த மாணவிக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. மறுதேர்வில் குறிப்பிட்ட மாணவியால் தேர்ச்சி ஏற்கனவே எழுதிய தேர்வில் பெற்ற அளவு மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட மாணவி முறைகேடாக மாநில அளவில் முதலிடம் பிடித்தது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த  மாணவிக்கு அடுத்த மதிப்பெண் பெற்ற மாணவியை மாநிலத்தில் முதலிடம் பெற்றதாக பீகார் அரசு அறிவித்தது.

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் 107 மதிப்பெண் பெற்றாலே (14.86 சதவீத மதிப்பெண்) போதும். யார் வேண்டுமானாலும் மருத்துவம் படிக்கலாம் என மத்திய அரசே தகுதியை குறைத்துள்ளது.  நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவ மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு விதிகள் வேறுவேறாக உள்ளன. தனித்தனி மருத்துவக்கல்வி இயக்ககம் உள்ளது. இவற்றுக்குள் எந்த நேரடி தொடர்பும் இல்லை. மருத்துவ கவுன்சில் விதிகளில்  ஒரு மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர் வேறு மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்ககூடாது என்று விதி உள்ளது.தமிழகத்தில் நீட் தேர்வு  அமலுக்கு வந்த 2017ம் ஆண்டு ஒரே மாணவர் தமிழகம், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால் குறிப்பிட்ட மாணவர் தமிழக மருத்துவ  கலந்தாய்வில் பங்கேற்கவில்ைல. அதனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் 2017ம் ஆண்டு தமிழகத்தில் வேறு மாநிலத்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இந்த  வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இதே போல் 2018ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஒரு மாணவர் இரு மாநிலங்களின் தரவரிசைப்பட்டியலில் பட்டியலில் இடம்பெற்றதற்காக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் மீது என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டது என்ற தகவலை மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிடவில்ைல.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஜூலையில் தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்ற 2 மாணவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதற்கு போதுமான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. அதனால்  அந்த மாணவர்கள் மருத்துவக்கலந்தாய்வில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலும் விண்ணப்பித்ததற்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்ைல.  வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தங்கி, எளிதில் இருப்பிட சான்றிதழ் பெற்றுவிட முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தற்போது ஆள்மாறாட்ட புகாருக்கு ஆளாகியுள்ள மாணவர் உதித்சூர்யா மருத்துவ கலந்தாய்வில்  பங்கேற்றாரா அல்லது அவருக்கு நீட் தேர்வு எழுதியாக சொல்லப்படும் மாணவர் கலந்தாய்வில் பங்கேற்றாரா என்பதும் மர்மமாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக தமிழக மருத்துவக்கல்வி இயக்ககத்தின் 30 ஆயிரத்துக்கும் அதிகமான  விண்ணப்பங்களை 10 முதல் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து வரிசைப்படுத்த போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லை.

நீட் தேர்வு அமலுக்கு வந்த பின், இதுவரை விதிகளுக்கு முரணாக மருத்துவம் படிக்க சேர்ந்ததாக எந்த மாணவருக்கும் இதுவரை தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை ரத்து செய்யப்படவும் இல்லை. இவ்வாறு பல்வேறு வழிகளில் முறைகேடுகள்  நடைபெற வாய்ப்புள்ளது.

Related Stories: