பராமரிப்பு, பழுது நீக்குவதில் அலட்சியம் தமிழகத்தில் தொடரும் மின்விபத்து: உயிரிழப்புகளை தடுக்க கோரிக்கை

சென்னை: பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் மின்விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதைத்தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 2.60 கோடிக்கும் மேலான மின் இணைப்புகள் உள்ளன. அதிகமான இடங்களில் சாலையோரங்களில் மின்கம்பங்கள் அமைத்து வயர்கள் வழியாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும்  பூமிக்கடியில் கேபிள் பதிக்கப்பட்டு, அதன் மூலமாக மின்விநியோகம் நடக்கிறது.

இதற்காக ஆங்காங்கு சாலையோரங்களில் பில்லர் பாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ்களுக்கு மின்நிலையங்களில் மின்சாரம் கொண்டுவரப்படும். பிறகு பாக்ஸில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இணைப்பு  கொடுப்படுகிறது. இதனால் எப்போதும் சம்மந்தப்பட்ட பாக்ஸில் மின்சாரம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பல இடங்களில் இந்த பாக்ஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவை பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கிறது. வயர்கள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன.  இதேபோல் சில இடங்களில் உள்ள மின்சார கம்பங்களும் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுங்கையூர் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின்பெட்டிகள் திறந்த நிலையில் கிடந்தது. அதன் அருகே மழைநீர் தேங்கியிருந்தது. இதை  கவனிக்காமல் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் கால்வைத்தனர். இதில், அவர்கள் 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மட்டும் அல்லாது மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் நேற்று முன்தினம் மாத்தூர் எம்எம்டிஏ-2வது பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்வாரிய ஊழியர் முருகன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் பலியானார். முன்னதாக கடந்த 11ம் தேதி  தண்டையார்பேட்டையில் மின்பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகலிவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில் அந்த இடத்தை கடந்தபோது தீனா என்ற சிறுவனும், சிட்லபாக்கத்தில் சேதுராஜ் என்பவர் மின்விபத்தில் பலியானார். இதுபோல் ஆண்டுதோறும் மின்விபத்துக்கள் நடந்து வருகிறது. இதில் மின்ஊழியர்கள், பொதுமக்கள், கால்நடைகள் உள்ளிட்டவை இறக்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மின்வாரியம் பராமரிப்பு பணியில் சரிவர கவனம் செலுத்துவதில்லை. மின் பெட்டிகள் பழுது மற்றும் மின்தடை தொடர்பாக 1912 என்ற புகார் நம்பரில் தொடர்பு  கொண்டு மக்கள் தெரிவிக்கலாம்  என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், அந்த நம்பரை தொடர்பு கொண்டால் பெரும்பாலும் யாரும் பதில் அளிப்பதில்லை.

தாழ்வான இடத்தில் உள்ள பெட்டிகளை சுவர்  கட்டி உயரப்படுத்தினர். கதவுகள் இல்லாத பெட்டிகளுக்கு புதிய கதவுகள் அமைக்கப்பட்டு, அலுமினியத்தால் வர்ணம் பூசப்பட்டது. மின்மாற்றிகள் இருக்கும் இடங்களிலும் வேலிகள்  அமைக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் பராமரிப்பில் மீண்டும் அலட்சியம் காட்டப்படுகிறது. பல இடங்களில் தாழ்வான இடங்களில் மின் பெட்டிகள் உள்ளன. சில பகுதிகளில் புதிதாக சாலை அமைத்துள்ளனர். இதனால் ஏற்கனவே தாழ்வான இடத்தில் இருந்து பெட்டிகள், தற்போது மேலும் சில அடி பள்ளத்துக்குள் மூழ்கியிருக்கின்றன.  இதுபோன்ற பிரச்னைகளால் மின்விபத்து ஏற்படுகிறது. மேலும் பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காததால், அவர்களும் இறக்கின்றனர். இதனை தடுக்க வாரியமும் அரசும் துரித  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: