நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குசாவடிகள் பதற்றமானவை: நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டி

நெல்லை: நான்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை  தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி  தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செப் 23ம் தேதி தொடங்கி செப்.30ம்  முடிவடையும். அக்டோபர் 1ம் தேதியன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதியன்று நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூட்டாக பேட்டியளித்தனர். ஆட்சியர் ஷில்பா பேசுகையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்  அக்டோபர் 21ல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 3 பேர் நியமிக்கப்படுவர். 30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நெல்லை  மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் பொருந்தும். நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

01-01-2019 வரையிலான தரவுகள் அடிப்படையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 2,56,414 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 1,27,025 ஆண் வாக்காளர்களும், 1,29,385 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 4 பேர் உள்ளனர். வாக்களர்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு உதவ செயலி பயன்படுத்தப்படும் என்றும் நெல்லை ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

Related Stories: