பூக்கள் இல்லாத பூங்காவை இங்கதான் பார்க்கிறோங்க...

*  கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் புலம்பல்

* புதுப்பிக்க கோரிக்கை

கொடைக்கானல் :  கொடைக்கானல் செட்டியார் பூங்கா பராமரிப்பின்றி இல்லாமல் உள்ளதால் நுழைவுக்கட்டணம் செலுத்தி செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் செட்டியார் பூங்கா தற்போது பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்துள்ளது. இங்குள்ள நடைபாதைகள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கின்றன. பூங்கா என்ற பெயரளவிற்கு கூட பூக்கள் இல்லை. குறிப்பாக கடந்தாண்டு கஜா புயலில் விழுந்த மரங்கள் கூட அகற்றப்படாமல் உள்ளது.

இந்த அவல நிலையில் பூங்காவை பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் சுற்றுலா பயணிகள். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே சென்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. பூக்கள் இல்லாத பூங்காவை இங்குதான் பார்க்கிறோம். நடைபாதைகள் சேதமடைந்தும், புயலில் விழுந்த மரங்கள் அகற்றப்படாமலும் உள்ளன. எனவே தோட்டக்கலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து செட்டியார் பூங்காவை புதுப்பித்து இங்குள்ள மலர்ச்செடிகளை பராமரித்து ஆண்டுதோறும் பூக்கள் பூக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: