கடலூர் ஒன்றியத்தில் நிதி ஒதுக்கியும் கிடப்பில் கிடக்கும் குளங்கள் தூர்வாரும் பணி

*பொதுமக்கள் குற்றச்சாட்டு

கடலூர் : கடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை

எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தைவிட அதிகளவில் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழைப்பொழிவு இருக்குமெனவும் கருதப்படுகிறது. இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி மேம்படுத்துவதற்காக குடிமராமத்து பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்காக மாவட்டத்தில் ரூ.18 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடலூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு பெய்த பெருமழையின் காரணமாக கடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண்டூர், நத்தப்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிஞ்சி நகர், ஓம்சக்தி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட நகர பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆனது.

இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ரூ.ஒரு கோடி மதிப்பில் துவங்கப்பட்ட திட்டம் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் பாதியில் நிற்கிறது. கோண்டூர் பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் குளம் மற்றும் ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படவில்லை. இந்த குளங்களை தூர்வாரினால் 50க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீரின் வடிகால் பகுதியாகவும் திகழும். ஆனால் தற்போது பெய்த குறைந்தளவு மழையிலேயே குறிஞ்சிநகர் குளம் பாசி படிந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள குளத்திலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் மழைநீர் தேங்க வழியில்லாமல் உள்ளது. இதுபோன்று கடலூர் ஒன்றியத்தில் உள்ள 52 கிராம பஞ்சாயத்துகளில் முறையான குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே கடலூர் ஒன்றியத்தில் குடிமராமத்து மற்றும் பருவமழை பாதிப்பு தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: