தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை:  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு  வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 220 மிமீ  மழை பதிவாகியுள்ளது. ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த அளவுக்கு அதிமாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பூண்டி 210 மிமீ, அரக்கோணம் 170 மிமீ, தாமரைப்பாக்கம் 150 மிமீ, சோழவரம் 130 மிமீ, திருத்தணி  120 மிமீ, எண்ணூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு 110 மிமீ, சென்னை விமான நிலையம் 90 மிமீ, பூந்தமல்லி 80 மிமீ, சென்னை டிஜிபி அலுவலகம் 70மிமீ, அண்ணா பல்கலைக் கழகம் 60மிமீ, கல்பாக்கம் 50மிமீ, கொளப்பாக்கம், பொன்னேரி  50மிமீ, செம்பரம்பாக்கம், சத்தியபாமா பல்கலைக் கழகம், காஞ்சிபுரம் 30மிமீ, மழை பெய்துள்ளது.

 சென்னையில் நேற்று இரவு முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வெளியூர் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க  வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்றும் மழை பெய்ததால் சென்னையில் பல்வேறு இடங்களில் காலையில் இருந்தே போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர்  பாதிக்கப்பட்டனர். மாலையிலும் மேகமூட்டம் உருவாகி இரவில் மழை பெய்தது. வளிமண்டல காற்று சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை இருப்பதால் வட தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கு நிலை ஏற்பட்டுள்ளது.  இது தவிர வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன்  காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சவூர், திருப்போரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய இடங்களில்  கனமழை பெய்யும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, தமிழக கடலோர துறைமுகங்களான சென்னை,  கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்ததை குறிக்கும் குறைந்த பட்ச எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் பெய்த மழையை  பொறுத்தவரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தான் இயல்பைவிட 79 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 63, அரியலூர் 62, திருவண்ணாமலை 61, திருவள்ளூர் 33, வேலூர் 26, விருதுநகர் 25, நாமக்கல் 36, பெரம்பலூர் 26,  கன்னியாகுமரி 23 சதவீதம் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் செப்டம்பர் மாதத்தில் இயல்பாக 386 மிமீ மழை பெய்ய வேண்டும். இதுவரை 497 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவில்  மட்டும் 100 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 29 சதவீதம் கூடுதல். திருவள்ளூரில் செப்டம்பர் மாதத்தில் 396 மிமீ மழை பெய்ய வேண்டும். இதுவரை 526 மிமீ மழை பெய்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மட்டுமே அங்கு  220 மிமீ மழை பெய்துள்ளது.

Related Stories: