பத்திரப்பதிவில் உள்ள குளறுபடியால் பதிவுத்துறைக்கு வருவாய் 4,407 கோடியாக குறைந்தது : கடந்தாண்டை காட்டிலும் 1.92% சரிவு

சென்னை: பத்திரப்பதிவில் உள்ள குளறுபடியால் பதிவுத்துறைக்கு வருவாய் 4,407 கோடியாக குறைந்தது. இது கடந்தாண்டை காட்டிலும் 1.92 சதவீதம் சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் பத்திரபதிவு அமலுக்கு வந்தது. 2018-19ம் நிதியாண்டில் 11 ஆயிரம் கோடி வருவாய் எட்டப்பட்டது. தொடர்ந்து 2019-2020ம் நிதியாண்டில் 13 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு இடர்பாடுகள் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு அலுவலகத்தில் 10 பத்திரங்கள் பதிவு செய்வதே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சார்பதிவாளர்கள் பலர் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களின் மனை கடந்த 2 ஆண்டுகளாக வரன்முறை செய்யப்படாததால் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்கள் குறைந்தது.

மேலும்,  அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்யக்கூடாது என்று டிடிசி சார்பில் பதிவுத்துறை ஐஜிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால், பத்திரப்பதிவுக்கு வந்தால் கூட சார்பதிவாளர்கள் அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதுவும் பத்திர பதிவுக்கு குறைந்தது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் 10 லட்சத்து 45 ஆயிரத்து 597 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 4,407 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 10 லட்சத்து 67 ஆயிரத்து 234 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 4,407 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 1.92 சதவீதம் சரிவை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று 2.03 சதவீதம் பத்திரப்பதிவும் சரிந்துள்ளது.. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இந்தாண்டு 13 ஆயிரம் கோடி வருவாய் எட்டுவது சிரமம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், 10 ஆயிரம் கோடி கூட வராது. எனவே, ஆன்லைன் பத்திரப்பதிவை வேகப்படுத்துவது மட்டுமின்றி, நிலுவையில் உள்ள ஆவணங்களை உடனடியாக திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: