தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசு பள்ளிகளில் பாடம் நடத்தலாம் : பள்ளிக் கல்வித்துறையில் அடுத்த குழப்பம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.  இதனால், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு, மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றியது, ஆசிரியர்களுக்கு பணி நிரவல் செய்யும் போது விதிகளை மீறி சீனியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவது, ஓராசிரியர் பள்ளிகள் அமைப்பது, தொடக்கப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளுடன் இணைப்பது என பல்வேறு நடவடிக்கைகள் பள்ளிக் கல்வித்துறையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளிக் கல்வித்துறைதான் தற்போது பரபரப்பாக பேசுபொருளாக மாறியுள்ளது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் தற்போது ஒரு புதிய சுற்றறிக்கை ஒன்றை 16ம் தேதி அன்று அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளில் கற்றல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அனுமதி அளித்துள்ளார். இதனால் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மாணவர்களும் கூடுதலாக படிக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிக்குள் வந்து மேற்கண்ட செயல்களை மேற்கொண்டால் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது என்று பெற்றோர் அச்சப்படுகின்றனர். தொண்டு நிறுவனங்கள் மூலம் பள்ளிக்குள் வரும் நபர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களா, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனரா, என்ற கேள்வி எழுகிறது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முறையாக படித்து பட்டம் பெற்று, உளவியல் கல்வியும் கற்றவர்கள். மேலும் மாணவ மாணவியரின் குடும்பச் சூழல் நன்கு அறிந்து அதற்கேற்ப தொடர் கண்காணிப்புக்கு பிறகு கற்றல் கற்பித்தல் நிகழ்வில் ஈடுபடுகின்றவர்கள். இப்படிப் பழகிய மாணவர்களிடம் புதிய நபர்கள் நுழைந்து கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மாணவர்கள் அச்சப்படும் நிலை ஏற்படும்.

பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்காத வகையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் எந்த நேரத்தில் தொண்டு நிறுவனத்தினர் வருவார்கள் என்ற விளக்கம் இல்லை. தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் கல்வியாளர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்ற அம்சத்தை நீக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், பள்ளிக் கல்வித்துறை அதை செயல்படுத்த முனைப்பு காட்டுகிறது. எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பள்ளிகளை காப்பாற்றவும், மாணவர்களை நலனை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: