மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது மனிதத் தன்மையற்றது..இதன்மூலம் ஏற்படும் இறப்புகளை தடுக்கவும் அரசு தவறிவிட்டது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது நாகரீகமற்றது, மனிதத் தன்மையற்றது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதிவெறி வன்முறைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ‘எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ அமலில் உள்ளது. இம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை இச்சட்டத்தின் மூலம் உடனடியாக கைது செய்ய முடியும். இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உரிய விசாரணையின்றி கைது செய்யப்படும் பிரிவை இந்த சட்டத்தில் இருந்து நீக்கி கடந்த 2018 மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு ஜாதிய பாகுபடுகள் மற்றும் தீண்டாமைகள் குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், அதிரடி கருத்துகளையும், விமர்சனங்களையும் நீதிபதிகள் முன்வைத்தனர். குறிப்பாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை உள்ளது. இது நாகரீகமற்ற மற்றும் மனிதத் தன்மையற்றதாகும்.

அவர்களுக்கு முகமூடிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏன் நீங்கள் வழங்குவதில்லை. உலகில் எங்கும, இதுபோன்று விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழக்கும்படி விட்டுவிடுவதில்லை. ஆனால், இங்கு மாதத்திற்கு 4 முதல் 5 பேர் வரை கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கி உயிரிழக்கின்றனர். இந்த இறப்புகளை தடுக்க அரசு தவறிவிட்டது. இதுபோன்ற சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கின்றது. தீண்டாமையை ஒழிக்கும் அரசியலமைப்பு உள்ளபோதிலும, இதுபோன்ற மனிதர்களோடு கை குலுக்குவீர்களா? என்று கேட்டால் பலர் இல்லை என்றே பதில் கூறுவர். நாம் அவ்வாறு தான் நடந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த நிலை மேம்படுத்தப்பட வேண்டும். நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஜாதி அடிப்படையிலான வேறுபாடுகள் களையப்படாமல் உள்ளன, என்று நீதிபதி அருண் மிஷ்ரா தெரிவித்தார். இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மலக்குழிகளால் மட்டும் மனிதர்கள் இறக்கவில்லை. குண்டும் குழியுமான சாலையாலும் இறப்பு நேரிடுகிறது, என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: