நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு கல்லூரி டீன் ராஜேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தேனி அருகே உள்ள கண்டமனூர் காவல்நிலையத்தில் டீன்  புகார் அளித்துள்ளார். அதில், சென்னையை சேர்ந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்து முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு நடந்து முடிந்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், சென்னை மாணவர் ஒருவருக்கு தேனி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர் சேர்ந்ததாக தகவல் வெளியானதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 110 இடங்கள் இருந்தன. அதில் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 15 மாணவர்களும், தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 85 மாணவர்களுக்கான இடங்களுக்கு சேர்க்கை நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த ஒரு மாணவர் மாநில அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தார். அந்த மாணவர் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் ஒருவர் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மாணவர் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குனரின் ஆய்வுக்கு மருத்துவக்கல்லூரி அனுப்பியது. ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பதால் விசாரணைக்கு மருத்துவக்கல்லூரி அனுப்பியிருந்தது.

இதையடுத்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத்தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகாருக்குள்ளான மாணவர் சென்னையில் இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. மாணவர் மீதான புகாரைத் தொடர்ந்து ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கும் மருத்துவக் கல்லூரி அனுப்பியிருந்தது. ஆள்மாறாட்ட சந்தேகம் எழுந்த பின் சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்பட வேறுபாடு தொடர்பாக மாணவரின் தாயை தொடர்புகொண்ட போது, அவர் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சென்னையை சேர்ந்த அந்த மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் மருத்துவக்கல்லூரி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த  மாணவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

Related Stories: