வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி உயர் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப் பழமையான பாரம்பரியமிக்க உயர் நீதிமன்றங்களில் 3வது உயர் நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் விளங்குகிறது. கடந்த 1862ல் ஆரம்பிக்கப்பட்ட உயர் நீதிமன்றம், தற்போது 157 ஆண்டுகளை தாண்டி பெருமையுடன்  உள்ளது. உயர் நீதிமன்றத்திற்குள் நுழைய உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நுழைய முடியும். மேலும், உயர் நீதிமன்ற பிரதான கட்டிடங்களுக்கு செல்லும் வழிகளில் மத்திய தொழில்  பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு டெல்லியிலிருந்து ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், உயர் நீதிமன்றத்தை வரும் 30ம் ேததி குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. அதில், கடிதம் எழுதிய நபர் தனது முகவரியை மோதிநகர், சுதர்ஸன் பார்க், டெல்லி என்றும், தனது பெயர் ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்றும் தனது மகனுடன் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் பல இடங்களில்  செப்டம்பர் 30ம் தேதி வெடிகுண்டு  வைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, பதிவாளர் ஜெனரல் அலுவலகம் உடனடியாக அந்த கடிதத்தை சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியது. அதுமட்டுமல்லாமல், நேற்று உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழுவும் ஆலோசனை நடத்தியது.இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது என்றும் சோதனையை தீவிரமாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற பாதுகாப்பு கூடுதல் துணை கமிஷனர் வக்கீல்கள் சங்கங்களுக்கு  ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘‘உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனவே, நீதிமன்றங்களுக்கு வரும் வக்கீல்கள் அவர்களின் வக்கீல் உடையை அணிந்து வரவேண்டும். உரிய அடையாள அட்டையை காட்ட வேண்டும். இந்த தகவலை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் வக்கீல்களுக்கு தெரிவித்து, உயர் நீதிமன்ற  பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.இதையடுத்து நேற்று காலை முதல் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் 7 நுழைவாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. கமாண்டோ வீரர்களும் நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். உள்ளே  நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. இன்று இந்த பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

Related Stories: