கர்நாடகத்தின் பலவீனமான முதல்வர் எடியூரப்பா : சித்தராமையா கடும் தாக்கு

சாம்ராஜ்நகர் : மத்திய அரசிடம் இருந்து மழை வெள்ள நிவாரண நிதி பெற்று வருவதில் மாநில அரசு செயலிழந்துள்ளது. அந்த வகையில் முதல்வர் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் பலவீனமான முதல்வர் என்று சொல்லலாம் என முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:மாநிலத்தின் முதல்வராக நான் இருந்தபோது வறட்சி ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மத்திய அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தேன். இதற்காக மூன்று முறை குழுக்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தினேன்.

தற்போது நான் முதல்வர் பதவியில் இருந்திருந்தால் அனைத்து கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று நிவாரண நிதி பெற்று வந்திருப்பேன். ஆனால் தற்போது முதல்வர் பதவியில் உள்ள எடியூரப்பா மழை வெள்ள நிவாரணம் பெற்று வருவதில் செயலிழந்துள்ளார். இதனால் அவர் மாநிலத்தின் பலவீனமான  முதல்வராக திகழ்ந்து வருகிறார். இவரால் மாநிலத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்று வர முடியவில்லை என்றால் பதவியை ராஜினமா செய்து விட்டு செல்ல வேண்டும். அர்காவதி டிநோடிபிகேஷன் விஷயத்தில் எனக்கு தொடர்பு கிடையாது. அது எடியூரப்பா சம்பந்தப்பட்ட விஷயம்.  மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் சர்வகட்சி கூட்டத்தையும் கூட்டவில்லை. ஒருங்கிணைப்பு குழு தலைவரான என்னையும் அழைக்கவில்லை. அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா குறித்து கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றார்.

Related Stories: