பெற்ற தாயினால் கடத்தல் கும்பலிடம் விற்கப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

புதுடெல்லி: டெல்லி பெண்கள் ஆணையம் கூறிருப்பதாவது:டெல்லியை சார்ந்த 15 வயது சிறுமி தனது தாய் மற்றும் இரண்டாவது தந்தையுடன் வசித்து வந்தார். சிறுமியை அவரது தாய், நேற்று முன்தினம் பாதர்புரில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அங்கு செல்லாமல்  நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கூட்டிச்சென்றார். அங்கு சிறுமியை தங்கவைத்துவிட்டு வெளியில் வேலை இருப்பதாகவும், அங்கு செல்ல வேண்டும் என்றும் சிறுமியிடம் அவரது தாய் கூறியுள்ளார். அதோடு,  ஷாகித் என்பவர் வந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வார் என்றும் சிறுமியிடமி கூறி அவரோடு செல்லுமாறு தெரிவித்துவிட்டு தாய் வெளியில் சென்றுவிட்டார். இதற்கிடையில் ஷாகித் என்பவர் வந்து சிறுமியை உடன் அழைத்து சென்றார். ஆனால், சிறுமியின் வீட்டிற்கு செல்லாமல் அவர் பாவனா கிராமத்தின் ஈஸ்வர் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கூட்டிச்சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த சில பெண்கள், சிறுமியை கல்யாண உடையில் தயாராகுமாறு கூறியுள்ளனர்.

மேலும், அவரது தாயார் 1 லட்சத்திற்கு விற்று விட்ட விபரத்தையும் தெரிவித்தனர். இதனால் செய்வதறியாது தவித்த அச்சிறுமி அன்றைய தினம் இரவில் எப்படியோ அங்கிருந்து தப்பித்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டாரிடம் நடந்த விஷயத்தை கூறி உதவி கேட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் எங்களிடம்(பெண்கள் ஆணையம்) சிறுமியை பற்றிய தகவல் தெரிவித்தனர். நாங்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று ஒப்படைத்தோம். அங்கு அச்சிறுமியிடம் விசாரித்ததில், தனது தாயார் கடன் சுமையில் இருப்பதாகவும் கடந்த வாரம் தனது ஒரு வயது சகோதரனை தாயார் கடத்தல் கும்பலிடம் விற்று விட்டதாகவும் தெரிவித்தார். எனினும், இச்சம்பவம் குறித்து அறிந்த உடன் ஒரே நாளில் சிறுமியை மீட்டுள்ளோம். இவ்வாறு மாநில பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.

Related Stories: