சுங்குவார்சத்திரம் அருகே ஆன்மிக மாநாடு தமிழ்போல இனிமையான மொழி வேறேதும் இல்லை: கவர்னர் பன்வாரிலால் பேச்சு

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பொடவூரில் உள்ள பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ஆன்மிக மாநாடு நடைபெற்றது. மூத்த ராஜயோக ஆசிரியை உஷா தலைமை வகித்தார்.திருவனந்தபுரம் சாந்தகிரி ஆசிரமத்தின் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வி, சென்னை மயிலாப்பூர் உயர்மறை மாவட்ட பங்கு தந்தை தாமஸ் இளங்கோ, சென்னை மந்தைவெளி ஈத்கா மசூதியின் தலைமை இமாம் மவ்லவி இயாஸ் ரியாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் தமிழக சேவை ஓருங்கிணைப்பாளர் பீனா வரவேற்று பேசினார். மாநாட்டை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா மதத்தையும் ஒன்றாக நினைக்கிறேன். எல்லா மதத்தவர்களுக்கும் அடை க்கலம் கொடுத்த நாடும் எங்கள் இந்தியா தான் என்று பேசியிருக்கிறார். எந்தவொரு மனிதரும் உள்ளன்போடு பக்தி செய்தால் அகங்காரம் இருக்காது.

தன்னை உணர்தலை ஆதிசங்கரரும் பின்பற்றினார். நான் தனியாக தான் இருக்கிறேன் என நினைத்து மனிதர்கள் பலரும் பாவம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களது மனசாட்சி இவர்களை பார்த்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.  இதை ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து விட்டால் உலகில் பாவ செயல்களே இருக்காது.ஊழல் இல்லாமலும், எளிமையாக வாழ்ந்தாலும் எப்போதும் நிம்மதியாக வாழலாம். எளிமையான வாழ்க்கையை தான் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் பின்பற்றுகின்றனர். அவர்களை போல வாழ்ந்தால் ஊழல் இருக்காது. நிம்மதியும் வந்து விடும். தமிழ் மொழியை போல இனிமையான மொழி வேறு எதுவும் இல்லை. தமிழ் மிகவும் பழமையான மொழி. இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் சென்னையை சேர்ந்த அமைப்பின் மூத்த ராஜயோக பயிற்சி ஆசிரியை கலாவதி நன்றி கூறினார். மாநாட்டில் இஸ்கான் ஹரேராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தமிழ் இலக்கிய பதிப்புகளின் ஆசிரியர் கிரிதாரி தாஸ்ஜி, கோயம்புத்தூர் வராஹி மந்திராலயத்தை சேர்ந்த வராக மணிகண்ட சுவாமிஜி, சுவாமி சைத்தன்யானந்தர்ஜி ஆகியோர் உள்பட பல்வேறு மதங்களையும் சார்ந்த தலைவர்கள், போதகர்கள், இமாம்கள், தீட்சிதர்கள், மடாதிபதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: