நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்

சேலம்: போக்குவரத்து விதி மீறல் அபராதத்தை குறைக்க வலியுத்தி நாடு முழுவதும் வரும் 19ம் தேதி லாரி ஸ்டிரைக் நடக்கிறது. அன்று தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளை இயக்க மாட்டோம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபோக, கனரக வாகனங்களுக்கான டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை ஏற்றம், டீசல், சுங்க கட்டண உயர்வு போன்றவற்றால், லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடும் 10 கோடி பேர் வேலையிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது. லாரி தொழில் நசிவடைய காரணமான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதத்தை குறைக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முடிவெடுத்து அறிவித்துள்ளது.

இதன்படி, அதன் தலைவர் மிட்டல் தலைமையிலான குழுவினர், அனைத்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், சம்மேளனங்கள் போன்றவற்றுக்கு வரும் 19ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, பேக்குவரத்து விதிமீறல்களுக்கு மிக அதிகப்படியான அபராதத்தை விதித்து வசூலிக்கின்றனர்.

இதனை ராஜஸ்தான், குஜாராத் போன்ற பிற மாநிலங்களில், மாநில அரசு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல், தமிழகத்தில் அபராத தொகையை அரசு குறைத்து அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மத்திய அரசே குறைத்து அறிவித்திருக்க வேண்டும் என்பதே எங்களது கருத்து. மோட்டார் வாகன சட்ட பாதிப்பு, சுங்கக்கட்டணம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி வரும் 19ம் தேதி நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.

இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவை அளிக்கிறது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள 4.50 லட்சம் லாரிகளும் ஓடாது. டோல்கேட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கும் நிறுவனங்களாக உள்ளது.

லாரி உரிமையாளர்களை கசக்கி பிழியும் வகையில் செயல்படுகிறது. வருடத்திற்கு 15 சதவீத உயர்வு என்றிருக்கிறது. ஆனால், 6 மாதத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் வரை சுங்கக்கட்டணத்தை அதிகப்படுத்தி விடுகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக சுங்கக்கட்டணத்தை செலுத்துகிறோம் என நாங்கள் கூறுவதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

அதற்கு மத்திய அரசும் துணை போவது வருத்தத்தை தருகிறது. ஒவ்வொரு முறையும் மோட்டார் வாகன போக்குவரத்தில் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், அதை ஏற்பதாக ஆகிவிடும். அதனால் தான், நாடு தழுவிய அளவில் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறோம். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

*மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடும் 10 கோடி பேர் வேலையிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

*லாரி தொழில் நசிவடைய காரணமான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதத்தை குறைக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் 19ம் தேதி நடக்கிறது.

Related Stories: