புனிதம் கெட்டு சாக்கடையாய்போன விருத்தகாசி கூவமாக மாறிவரும் மணிமுக்தாறு : குப்பைத்தொட்டியாக மாறும் அவலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம்  கோமுகி அணையில் இருந்து உருவாகும் மணிமுக்தாறு  கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம்,  சேத்தியாத்தோப்பு வழியாக பயணித்து  கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலமாக பலலட்சம் ஏக்கர் விளை  நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  விருத்தாசலம் பகுதியின் ஜீவநதியாக  போற்றப்படும் இந்த  ஆறு கடந்த சிலஆண்டுகளுக்கு முன்  தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருந்தது. பண்டிகை நாட்கள் மற்றும் புதுமணத்தம்பதிகள் அரசம் சுற்றும் ஐதீகமும் நடைபெற்று வந்தது.   மழையின்மை காரணத்தால் சொட்டு நீரைக்கூட ஆற்றில் பார்க்க முடிவதில்லை. மேலும் விருத்தாசலம் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் முழுவதும் இந்த ஆற்றில் கலப்பதால் கூவமாக மாறி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், கொசுக்கள் பெருக்கம், பன்றிகள் கூட்டமும் ஆக்கிரமித்திருக்கிறது.  பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு நகரத்தின் பெரும் குப்பைத்தொட்டியாக மாற்றப்பட்டு வருகிறது. பழமலைநாதர் ஆலயத்தையொட்டி செல்லும் இந்த நதியை புனிதநதியாக போற்றி பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது விழிப்புணர்வு ஏதுமற்ற நிலையில் மக்கள் இருப்பதால், கடுமையான பின்விளைவுகளை சந்தித்து வருகிறார்கள். கல்வராயன் மலையில் இந்த ஆறு  தோன்றும்போது,  மணிமாலை மற்றும் முத்துமாலை ஆறாக தோன்றி பின்பு கோமுகி  அணையில் இருந்து மணிமுக்தாறாக வருகிறது. விருத்தாசலம் பழமலைநாதர் கோயில்  அருகே இந்த ஆறு ஓடும்போது அதற்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு. நாட்டில் உள்ள  அனைத்து கோயில்களிலும் தெய்வத்துக்காக குளம், கிணறு, சுனை என தீர்த்தமாக  அமைத்து தெய்வ வழிபாடு நடக்கும். இங்கு மட்டும் அவ்வாறு எதுவும் இன்றி, ஒரு  ஆற்றையே தீர்த்தமாக பழமலைநாதர் அருள்புரிந்து வருகிறார். இந்த ஆற்றில்  புனித நீராடி பழமலைநாதரை தரிசிப்பதைத்தான், காசியை விட வீசம் பெரிது  விருத்தகாசி என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்காக அப்போதே மன்னர்கள் இந்த  ஆற்றில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு,  ஆற்றின் இரு மருங்கிலும்  கருங்கற்களால்  ஆன படிக்கட்டுகள் கட்டி பராமரித்து வந்தனர். தமிழ்  இலக்கியங்களிலும், சங்ககால நூல்களிலும் அதிக இடம்பெற்ற இந்த நதி தற்போது  ஏட்டளவில் இருக்கிறது. பின்வந்த நாட்களில் அந்த கற்களையெல்லாம்  பெயர்த்தெடுத்து சென்று விட்டனர். கற்களை மட்டுமின்றி ஆற்றினுள் இருந்த  மணலை எல்லாம் அள்ளி சென்று விட்டு, ஆற்றையே ஆக்கிரமித்து  பலமாடிக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஆற்றிலும் அதன் அருகிலும்  முட்புதர்கள் உருவாகி பராமரிப்பின்றி உள்ளதால் தற்போது கஞ்சா விற்பனை,  சூதாட்டம், விபசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் இந்த  ஆற்றுப்பகுதியில் நடந்தேறி வருகின்றன.

இது குறித்து  மணிமுக்தாறு பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். தங்க.தனவேல்  கூறுகையில், மணிமுக்தாற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து எங்கள் இயக்கம்  பலமுறை நகராட்சி கமிஷனர், தாசில்தார், சப்கலெக்டர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடத்திலும் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வருகிறோம். இதைப்பற்றி எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதே கிடையாது. ஆற்றில் தினமும் பல்லாயிரக்கணக்கான டன் மணலை அள்ளி எடுக்கின்றனர். இதனால் ஆற்றில் மணல் இல்லாமல் போய் கட்டாந்தரையாக தெரிகிறது. மணல் உள்ள போது சாக்கடை நீர் கலந்தாலும் அந்நீரை மணல் உறிஞ்சுவதன் மூலம் சாக்கடை நீர் நல்ல நீராக பூமிக்குள் இறங்கும். அப்போது நீர்மட்டம் குறையாமல் இருக்கும். இதனால் பொதுமக்களும் பயன்படும் வகையிலும், விவசாயம் செய்வதற்கு விவசாயிகளும் பயனடைய வாய்ப்புள்ளது. தற்போது சாக்கடை நீர் முழுவதும் ஆற்றுக்குள்ளேயே தேங்கி நிற்பதால் நகரம் முழுவதும் துர்நாற்றம் வீசி, பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை அரசு முழுகவனம் செலுத்தி கழிவுநீர் செல்வதற்கு தனி வாய்க்கால் அமைத்து அதனை ஆற்றில் கலக்காமல் வெளியே செல்ல வழிவகுக்க வேண்டும் என்றார்.உபரிநீரை மணிமுக்தாற்றில் விட வேண்டும் மணிமுக்தாறு பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ராமச்சந்திரன்:

அதிகளவில் மருத்துவக்கழிவுகள் கலந்து வருவதுதான் மிகப்பெரிய கொடுமையாக இருக்கிறது.  நெய்வேலியில் இருந்து என்எல்சி உபரி நீரை வயலூர்  ஏரியில் தேக்கி வைக்க திட்டமிட்டுள்ளனர். ஏரி நிரம்பியபின் அந்த நீர் முழுவதும் மாரி ஓடை வழியாக மணிமுக்தாற்றில் கலக்கும்.  கலக்கும் போது ஆற்றில் சாக்கடைகளும் காணாமல் போகும் ஆற்றிலும் எப்போதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதற்கு அரசு முயற்சி எடுக்கவேண்டும்.   பூதாமூர் அருகே தடுப்பணை கட்டும் திட்டம் வருவதாகவும் கூறுகிறார்கள். அங்கு தடுப்பணை கட்டும்போது, ஆற்றில் மேலும் அதிகளவில் சாக்கடைகள் தேங்கும் வாய்ப்புகள்  உள்ளது.

Related Stories: