நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக ரூ.37.49 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு ஆணை

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக ரூ.37 கோடியே 49 லட்சத்து 45,771 கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் 18ம் தேதி வேலூர் தொகுதி தவிர மற்ற 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கான சம்பளம், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வாடகை, தொலைபேசி கட்டணம், பயணச் செலவு, பெட்ரோல், டீசல் செலவு, எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவினங்களுக்கு தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு ரூ.413 கோடியே 86 லட்சத்து 94 ஆயிரத்தை ஏற்கனவே வழங்கியது.

இதையடுத்து, பல மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கான பயணச் செலவு உள்ளிட்ட பல்வேறு வகையான செலவினங்களுக்கு தரப்பட வேண்டிய தொகை பாக்கி உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் கணக்கிட்டால் கூடுதல் தொகை ரூ.64 கோடியே 47 லட்சத்து 64,960 தேவை என்று கோரப்பட்டிருந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களின் இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து தேர்தல் செலவினங்களுக்காக ரூ.37 கோடியே 49 லட்சத்து 45,771 கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: