மின்தடை சேவை மையங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிப்பு : விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: பல்வேறு இடங்களில் உள்ள மின்தடை சேவை மையங்களில், போதுமான ஆட்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில்  நுகர்வோர் 1912 எண்ணில், தொடர்பு கொண்டு,  மின் தடை குறித்து, புகார் செய்யலாம்.  

இதுதவிர புதிய மின் இணைப்பு தாமதம், மீட்டர் பழுது, மின் விபத்து போன்ற அனைத்து விதமான புகார்களையும் தெரிவிக்கலாம். பல இடங்களில், இந்த மையத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை எனக்கூறப்படுகிறது. ஒருசில மையங்களில் கட்டடம் அமைக்கப்பட்டும், அதற்கான உபகரணங்கள் பொருத்தப்படாலும், பணியாளர்கள் நியமிக்கப்படாமலும் உள்ளனர். இதனால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் பல முக்கிய நகரங்களில், கணினி மின் தடை நீக்கும் மையங்களை அமைக்கம் பணியும் மந்தகதியில் நடந்து வருகிறது.இது குறித்து தொமுச நிர்வாகி சரவணன் கூறியதாவது: மின்நுகர்வோர்கள், தங்கள் மாதாந்திர மின் கட்டணம், புகார் மனுவின் தற்போதைய நிலை, புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகளை தெரிந்து கொள்ளவும், புகார்கள் தெரிவிக்கவும் 2009ம் ஆண்டு, வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கப்பட்டது. ஆனால் தற்போது மின்தடை புகார் மற்றும் பிற புகார்களை தெரிவிக்க 1912 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மின்தடை நீக்க சேவை மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மின்தடை ஏற்பட்டதும் இலவச அழைப்பான 1912 என்ற எண்ணில் நுகர்வோரின் சர்வீஸ் எண்ணை தெரிவித்தால் ஓரிரு மணி நேரத்தில் மின் தடை சீர் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல், தனி நபர் மின் தடை புகார் காலை 8 முதல் மாலை 6 மணி வரை சீர் செய்யப்படும் என்றும் மின்வாரியம் அறிவிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் இப்பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. கணினி மையத்தை தொடர்பு கொண்டால் சில இடங்களில் இந்த எண் பழுது அடைந்து விட்டது, நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் பிசியாக உள்ளது என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் புகார் தெரிவிக்க முடியாமல், மக்கள் அதிருப்தி அடைகின்றனர். விரைவில் மழைகாலம் துவங்கவுள்ளதால், அனைத்து பகுதிகளிலும் சேவை மைய பணிகளை, விரைவாக முடித்து தேவையான ஊழியர்களை பணியில் அமர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: