பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக திருமண ஏற்பாடு காதல் ஜோடியை சேர்த்து வைத்த திருநங்கைகள்

பாபநாசம் : பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் காதல் ஜோடியை திருநங்கைகள் சேர்த்து வைத்தனர். தஞ்சை அருகே உள்ள உதாரமங்கலத்தை சேர்ந்த நடராஜன் மகள் ஜெயா (21). செங்கிப்பட்டி அடுத்த பாலையப்பட்டி துரைமாணிக்கம் மகன் சித்திரவேல் (25). இருவருக்கும் வரும் 16ம் தேதி (திங்கள்) அன்று திருமணம் நடைபெற இருந்தது. இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த திருமணத்தில் ஜெயாவுக்கு விருப்பம் இல்லை. அவர் அதே ஊரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தார். ஆனாலும் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் தைரியம் அவருக்கு இல்லை. இதுபற்றி தனது காதலனிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது உறவினரான திருநங்கை சத்யா (35) என்பவரிடம் விக்னேஷ் கூறினார். இதையடுத்து சத்யா தன்னுடன் சில திருநங்கைகளையும், விக்னேஷையும் அழைத்து கொண்டு சரபோஜிராஜபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஜெயா மற்றும் அவரது பெற்றோரை காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்ஐ விமலாராணி கூறினார்.

இதைத்தொடர்ந்து பெண் வீட்டார், விக்னேசுக்கு பெண் கொடுக்க சம்மதித்தனர். இதுகுறித்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் திருநங்கைகள் ஏற்பாட்டில் சரபோஜிராஜபுரத்தில் உள்ள முனியாண்டவர் கோயிலில் விக்னேஷ், ஜெயா ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து கொள்ளும்படி மாப்பிள்ளையின் பெற்றோரிடம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: