பொருளாதார மந்தநிலை எதிரொலி : அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அறிவிப்பு

சென்னை : பொருளாதார மந்தநிலையால் வாகன உற்பத்தியை குறைத்து வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் வரும் 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை உள்ள நாட்களில்  7 நாட்கள் வேலையில்லா நாட்களாக கருதப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் வரும் 16 மற்றும் 23ம் தேதிக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிற நாட்களுக்கான இழப்பீடு பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அசோக் லேலண்ட் கூறியுள்ளது.

பொருளாதார மந்தநிலையால் வாகன விற்பனை கடுமையாக சரிவடைந்ததை அடுத்து நாட்டின் முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே சென்னை எண்ணூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு 16 நாட்கள் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த மாதம் முழுவதும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் மட்டுமின்றி ஒப்பந்த ஊழியர்கள் இந்த ஆலையை நம்பியுள்ள சிறு குறு தொழிற்சாலையின் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: