பிரபல கார் விற்பனை நிறுவன பெண் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை: பொருளாதார மந்தநிலை காரணமா? நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் பிரபல கார் விற்பனை நிறுவன பெண் தொழிலதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட இழப்புதான் தற்கொலைக்கு  காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். சென்னை கோயம்பேட்டில் தமிழகத்தின் முதன்மை டீலராக ‘‘லேன்சன் டொயோட்டா’’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு லங்காலிங்கம் முருகேசன் தலைவராக உள்ளார். இவர், திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்தவர். தொழிலதிபரான இவரின் மனைவி ரீட்டா லங்காலிங்கம் (50). திருச்செந்தூர் அருகில் உள்ள தண்டுபத்தை சேர்ந்தவர். இவர் லேன்சன் டொயோட்டா நிறுவனத்தில் இணை நிர்வாக இயக்குனராக இருந்தார். ரீட்டா, கார் விற்பனை பிரிவில் தனி சிறப்பாக செயல்பட்டு, நாடு முழுவதும் லேன்சன் டொயோட்டா கார் விற்பனை மையங்களை தொடங்கியவர். இவர் தனது கணவருடன் நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில், 3 கிரவுண்ட் பரப்பளவுள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக ரீட்டா சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்த ரீட்டா அவரின் அறைக்கு சென்று தூங்கினார். அவர் வழக்கமாக காலை 6 மணிக்கு எழுந்து அலுவலகத்துக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று காலை 11 மணி வரை அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டில் பணியாற்றும் ஏசுபாதம் (54) ரீட்டாவின்  அறை கதவை பலமுறை தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார், அறை கதவை உடைத்து பார்த்தபோது, ரீட்டா திரைச்சீலையால் மின்விசிறியில் தூங்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் அவரது கணவர் லங்காலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். பிறகு ரீட்டா உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை குறித்து போலீசார் கூறியதாவது: ரீட்டாவின் செல்போனை கைப்பற்றி கடைசியாக அவர் யார், யாரிடம் தொடர்பு கொண்டு பேசினார் என விசாரணை நடத்தி வருகிறோம்.லேன்சன் டொயோட்டா நிறுவனம் விற்பனை பிரிவு மேலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது. அதில் நாட்டின் பொருளாதார மந்தநிலையால் கார் விற்பனை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் டொயோட்டா நிறுவனத்தின் முக்கிய கார் விற்பனை முகவராக உள்ள லேன்சன் டொயோட்டா நிறுவனமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் நமது நிறுவனத்தின் ஒவ்வொரு மாதமும் கார் விற்பனை அளவை கண்டிப்பாக கடந்தாக வேண்டும் என்று மேலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது கணவரும் நிறுவனத்தின் இயக்குநருமான லங்காலிங்கத்திற்கும் ரீட்டாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை ரீட்டா வீட்டிற்கு வந்த போதும் நீடித்துள்ளது. இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்ட கணவர் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. பிறகு நள்ளிரவு வந்து ரீட்டா  அறையை அவரது கணவர் தட்டியுள்ளார். அப்போது ரீட்டா கதவை திறக்காததால் அவர் மீண்டும் வெளியே சென்று விட்டார். அதன் பிறகு காலையில்தான் ரீட்டா தற்ெகாலை செய்து கொண்ட தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் முழு விசாரணை நடத்திய பிறகுதான் ரீட்டா தற்கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமா என தெரியவரும். ரீட்டாவுக்கு நந்தகுமார் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். வெளிநாட்டில் உள்ள மகள் இன்று சென்னை  வருகிறார். அவர் வந்த பிறகு ரீட்டாவின் இறுதிச்சடங்கு செய்யப்படும்.

Related Stories: