சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணியில் முறைகேடு? 1 கோடிக்கு டெண்டர் எடுத்து 5 கோடிக்கு சப்கான்ட்ராக்ட் விட்டு லாபம்

* லாரிகளில் மணல் கடத்துவதாக புகார்

* தூர்வாரும் பணியை நிறுத்திய அதிகாரிகள் n பரபரப்பு தகவல்கள்

சென்னை: சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஒப்பந்தத்தை மீறி லோடு, லோடாக மணல் அள்ளுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தூர்வாரும் பணியை கனிம வளத்துறை நிறுத்திய சம்பவம் பொதுப்பணித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகளில் 150 ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஏரியில் 40 சதவீதம் கொள்ளளவு மண் படிமங்களாக காணப்படுகிறது. இதனால், ஏரிகளில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் முழு நீரையும் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஏரிகளை தூர்வாரி, அதன் மூலம் 2 டிஎம்சி நீரை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.

தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த ஆகஸ்ட்டில் சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இந்த தூர்வாரும் பணிக்கு 13 ஆயிரம் லோடுகளுக்கு ₹1 கோடி வரை ஒப்பந்த நிறுவனத்திடம் பணம் பெற்றவுடன் தான் மணல் அள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுப்பணித்துறை கூறியது. ஆனால், ஒப்பந்த நிறுவனம் தனது பணியை ₹5 கோடிக்கு சப்கான்ட்ராக்ட் விட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சப்கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் விதிகளை மீறி லோடு, லோடாக மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தான் நேற்றுமுன்தினம் கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. அதன்ேபரில் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், நேற்றுமுன்தினம் சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்தப்படி தான் மணல் அள்ளப்படுகிறது என்று கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகளிடம் இருந்து விடுவித்ததாக தெரிகிறது. அதன்பிறகே நேற்று முதல் மீண்டும் சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரம் அந்ததுறை வட்டாரத்தில் ெபரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒப்பந்தம் மீறி மணல் அள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: