கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை: உடனே மூட கோரிக்கை

துரைப்பாக்கம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, கொட்டிவாக்கத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவான்மியூர் சிக்னலில் இருந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஆரம்பமாகிறது. இச்சாலையில் அதிகளவு பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன.  உள்நாட்டு மற்றும் வௌிநாட்டினர் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால், இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.  இந்நிலையில் கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இங்கு மது அருந்த வரும் குடிமகன்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால்  பாதசாரிகள் சாலையின் நடுவே செல்லும் நிலைமை இருந்து வந்தது.

மேலும், மது அருந்திவிட்டு வருபவர்களும் அரைகுறை ஆடையுடன் சாலையோரத்தில் போதையில் மயங்கி கிடக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி  மாணவிகள் மற்றும் பெண்கள் முகம் சுழித்தபடி சென்று வந்தனர்.எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசிடம்   பலமுறை புகார் கொடுத்தனர். இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதி தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. பின்னர்  2018ம் ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிபுரம் டாஸ்மாக் மேலாளர் உத்தரவின்பேரில் இந்த கடையை திறக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இது சம்மந்தமாக அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர்.

மேலும் அந்த டாஸ்மாக் கடை வாசலில் மதுபோதையில் நடந்த தகராறில் பாலாஜி என்கிற இளைஞர் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் இந்த கடை மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். தகவலறிந்து நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த டாஸ்மாக் கடை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது. பின்னர் திடீரென இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளதால் இங்குள்ள  பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்கள், திரையரங்குக்கு செல்வோர் கடையில் மதுஅருந்திவிட்டு செல்கின்றனர்.

மேலும், இளைஞர்கள் பைக்குகளில் குடித்துவிட்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மேலும் மதுபோதையில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த பகுதியில் சாலை குறுகளாக இருப்பதாலும், மதுபிரியர்கள் சாலையிலேயே தங்கள்  வாகனத்தை நிறுத்திவிடுவதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரக்கூட முடியாத சூழ்நிலை உள்ளது. அரசு தலையிட்டு உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடாத பட்சத்தில் சாலை மறியல்  உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்” என்றனர். 

Related Stories: