ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து தவறு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லும் காரணம் முற்றிலும் தவறானது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.   தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அந்நிய முதலீடு பெற முதல்வர் வெளிநாடு செல்வதில் தவறில்லை. ஆனால் ஏற்கனவே நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் பெறப்பட்ட ஒப்பந்தங்களின் நிலை குறித்து தெளிவாக தெரிந்தால் தான், வெளிநாட்டை  சேர்ந்தவர்கள் இங்கு முதலீடு செய்யவே வருவார்கள். அப்படி இருக்கும் போது, கடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன ஆனது என்பதே கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில், தற்போதைய முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பது கேலிக் கூத்தாகத்  தான் உள்ளது.

பருவமழை பெய்யும் போது ஆண்டு தோறும் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்த பல வழிகள் இருக்கிறது. தண்ணீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தாமல் இஸ்ரேல் நாட்டுக்கு முதல்வர்  ஏன் செல்ல வேண்டும். இஸ்ரேல் நாட்டில் தண்ணீர் கிடையாது. அதனால் அந்த நாட்டில் தண்ணீர் சேமிப்புக்கு பல திட்டங்களை செயல்படுத்துகின்றனர். இங்கு கிடைக்கிற தண்ணீரை சேமித்தாலே போதும். அதை விட்டுவிட்டு இஸ்ரேல் நாட்டுக்கு முதல்வர் ஏன் செல்கிறார் என்று தெரியவில்லை.  ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு ஓலா, ஊபர் டாக்சிகளில் அதிகளவில் மக்கள் பயணிக்க துவங்கியிருப்பதே காரணம் என நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார்.

ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு நிர்மலா சீதாராமன் சொல்லும் காரணம் வேடிக்கையாக உள்ளது. மத்திய அமைச்சர் என்ற பெரிய பொறுப்பில் இருக்கும் அவர், காரணம் சொல்லும் போது யோசித்து சொல்ல வேண்டும். அவரது கருத்து  முற்றிலும் தவறு. ஓலா கால் டாக்சி உலகம் முழுவதும் இருக்கிறது. அங்கெல்லாம் ஆட்டோமொபைல் துறை சரிவையா கண்டிருக்கிறது. அவரது கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: