மயிலாப்பூரில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான துர்கையம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் 125 ஆண்டுகள் பழமையான துர்கையம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள அப்பர்சாமி கோவில் தெருவில் உள்ள துர்கையம்மன் கோவில், தனியார் அறங்காவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ஷங்கர் என்பவர் அர்ச்சகராக உள்ளார். நேற்று மாலை, இக்கோவிலில் ராகு கால விளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. இதனால், பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், வழிபாடுகள் முடிந்து கூட்டம் கலைந்த பின் பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரம் கொண்ட ஐமபொன் கிருஷ்ணர் சிலை காணாமல் போனது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதுகுறித்து அச்சகர் ஷங்கரின் கொடுத்த தகவலின் பேரில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவா, மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். கோவிலின் உள்ளேயும், வெளியிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சிலை இருந்த இடத்தில், கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்காக பக்தர் ஒருவரால் கொடுக்கப்பட்ட சிலையின் அப்போதைய மதிப்பு 35 ஆயிரம் என கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார். அது கோயில் வளாகத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெரிசல் மிகுந்த பூஜைவேளையில் பக்தர் போர்வையில் சிலை திருடிச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: