மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், மின்சார கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது: மின்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை: மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், மின்சார கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகமே நிதிநெருக்கடியில் தள்ளாடி வருவதை புள்ளி விவரங்கள் கோடிட்டு காட்டி வருகின்றன. அதுபோல தமிழக மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தது உட்பட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. எனவே அதனை மீட்டெடுப்பதற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்தவும், மின்சார கட்டணத்தை உயர்த்தவும் மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

Advertising
Advertising

இந்த நிலையில், மின்சார கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மின்சார வாரியத்தின் நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், புதிய மின் இணைப்புகளுக்கு கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகவும், அதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் நிதி சுமை அதிகரித்தாலும், அதை மக்கள் மீது சுமத்த அரசு விரும்பவில்லை என கூறியுள்ள அமைச்சர், இந்த ஆண்டு மட்டும் மின்வாரியத்துக்கு 7,000 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: