பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13ல் போராட்டம் சாலை ஆய்வாளர்களுக்கு லீவு இல்லை: முதன்மை இயக்குனர், தலைமை பொறியாளர் உத்தரவால் பரபரப்பு

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 17 ஆயிரம் சாலை பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு  உதவியாளர்கள் சங்கம் சார்பில் வரும் 13ம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சாந்தி சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர் சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல்வரிடம் மனு அளிப்பது என்று தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மற்றும் 13ம் தேதி  சாலை ஆய்வாளர்களுக்கு அத்தியாவசியம் மற்றும் முக்கிய காரணம் இன்றி எவ்வித விடுப்பும் வழங்க கூடாது எனவும் தலைமை இடத்தை  விட்டு வெளியே செல்ல அனுமதி அளிக்க கூடாது எனவும், மேலும், அன்றைய தேதியில் வருகை பதிவினை காலை 10.15 மணியளவில் தவறாது வட்ட அளவில் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்குமாறு அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதே போன்று நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன், சங்க பொதுச்செயலாளர் குருசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களது கோரிக்கைகளை அரசு விதிகளின் படி நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவைகள்  பல்வேறு நிலைகளில் இருந்து வருகின்ற நிலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதை கைவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க இயலாது என்பதை இதன் மூலம்  தெரிவித்து கொள்ளப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: