தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றியதால் எதிர்ப்பு: வக்கீல்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும், தாஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதனைதொடர்ந்து நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தநிலையில், நேற்று  உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி வரவில்லை. அவரது நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட 75 வழக்குகள் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதியின் பணியிட மாற்றத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற, ஆவின் கேட் அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் வழக்கறிஞர்கள் வைகை, விஜயகுமார் தலைமையில் 150கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நீதிமன்றம் அமைந்துள்ள பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது வழக்கறிஞர்கள் நீதிபதி மாற்றத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கூடி விவாதித்தனர்.

பின்னர், தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.இதேபோல், மெட்ராஸ் பார் அசோசியேஷன், லா அசோசியேசன், பெண் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன.

Related Stories: