சுடுகாட்டில் குப்பை தரம் பிரிக்கும் மையம் இறுதிச் சடங்கு செய்வதில் சிக்கல்: புழல் 23வது வார்டில் அவலம்

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 22 மற்றும் 23வது வார்டு பகுதிகளான கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், காஞ்சி அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  வசிக்கின்றனர்.இங்குள்ள 200க்கும் மேற்பட்ட தெருக்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு வசதியாக தொட்டிகள் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டன. இவ்வாறு தொட்டிகளில் கொட்டப்படும் குப்பை, லாரிகள் மூலம் அகற்றப்பட்டு, கொடுங்கையூர் குப்பை  கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தொட்டிகளில் நிரம்பும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் சரிவர அகற்றாததால், தெருக்களில் சிதறி, குப்பை குவியலாக காட்சியளித்தது. இப்பிரச்னைக்கு தீர்வாகவும், மேற்கண்ட வார்டுகளை குப்பையில்லா பகுதியாக மாற்றும்  வகையிலும் தெருக்களில் வைக்கப்பட்ட தொட்டிகளை கடந்த 2 மாதங்களுக்கு முன், மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதையடுத்து, மேற்கண்ட 2 வார்டுகளில் அனைத்து தெருக்களுக்கும் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் தினசரி நேரில் சென்று, வீடுகளிலேயே குப்பையை சேகரித்து, அவற்றை வாகனங்களில் கொண்டு வந்து, 23வது வார்டில் உள்ள சுடுகாட்டில்  கொட்டி தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை கிடங்கிற்கும் அனுப்பி வருகின்றனர்.

இவ்வாறு சுடுகாட்டில் குப்பையை கொட்டுவதால், பொதுமக்கள் இறுதிச் சடங்கு மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாற்று இடம் தேர்வு செய்து, அங்கு குப்பையை கொட்டி தரம் பிரிக்கவும், சுடுகாட்டில் உள்ள  குப்பை குவியலை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வீடுகளில் இருந்து குப்பையை சேகரித்து வாகனங்களில் கொண்டு வரும் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் உள்ள காலி இடம் மட்டுமின்றி சமாதிகள் மீதும் குவித்து வைக்கின்றனர். இதனால்,  இறுதிச் சடங்கு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: