2030ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலத்தை மேம்படுத்த இலக்கு: ஐ.நா குழு கருத்தரங்கில் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டுக்குள் தரிசுநில மேம்பாடு இலக்கானது, 21 மில்லியன் ஹெக்டேரிலிருந்து, 26 மில்லியன் ஹெக்டேராக உயர்த்தப்படும் என வறட்சி ஒழிப்புக்கான ஐ.நா. குழு கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார். வறட்சி ஒழிப்புக்கான ஐ.நா குழுவின் 14வது கருத்தரங்கு, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் 200 நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுக்கு இடையே வனப்பகுதி 0.8 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் தரிசு நில மேம்பாடு இலக்கு 21 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 26 மில்லியின்  ஹெக்டேராக உயர்த்தப்படும் என்பதை அறிவிக்க விரும்புகிறன். பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், தரிசு நிலம் போன்ற விஷயங்களில் உலகின் தென் பகுதியில் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தரிசு நில பிரச்னைக்கு  முக்கிய காரணமாக இருப்பதே தண்ணீர்தான். அதனால் உலக நீர் மேலாண்மை கொள்கை ஒன்றை வறட்சியை ஒழிப்பதற்கான ஐ.நா குழு உருவாக்க வேண்டும்.

பருவநிலை மாற்றம் காரணமாக நிலம் பல விதங்களில் வீணாகிறது. கடல்மட்டம் உயர்வு, அலைகள், தவறான காலத்தில் பெய்யும் கனமழை, புயல், வெப்பம் உயர்வால் ஏற்படும் புழுதிப் புயல் போன்றவற்றாலும் நிலம் மோசமடைகிறது.  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளாலும், நிலம் மாசுபடுகிறது. இது சுகாதார கேடுகளை ஏற்படுத்துவதுடன், விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத வகையில் மாசுபடுத்திவிடும். இதை தடுக்காவிட்டால், நிலத்தை மீட்பது முடியாத  காரியமாகிவிடும். வரும் ஆண்டுகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உபயோகத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு, உலகம் குட்பை சொல்ல வேண்டிய  நேரம் வந்து விட்டது. தரிசு நில மீட்பு நடவடிக்கை உட்பட பல விஷயங்களுக்கு, விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்துவதில் பெருமை அடைகிறது. இதேபோல் இந்தியாவின் நட்பு நாடுகளும், குறைந்த செலவிலான செயற்கைகோள்  தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நில மேம்பாட்டு யுக்திகளை மேம்படுத்துவதற்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடையும். இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நாவில் 27ம் தேதி பேசுகிறார்

ஐ.நா பொதுச் சபையின் 74வது கூட்டம் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.  இதில் உரையாற்ற 48 நாடுகளின் தலைவர்கள், 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி  வரும் 27ம் ேததி அன்று, ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து உரையாற்றுகிறார். இவருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்த கூட்டத்தில் பேசுகிறார். தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக  செயல்படுத்தியற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ வழங்கப்படவுள்ளது.

Related Stories: