சீக்கிய கலவர வழக்கால் மபி முதல்வர் கமல்நாத் பதவிக்கு ஆபத்து ? : மீண்டும் தூசு தட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி

புதுடெல்லி: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்துக்கு எதிரான சீக்கிய கலவர வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1984ல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் டெல்லியில் நடந்த கலவரத்தில் தற்போது மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருக்கும் கமல்நாத்துக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் கட்சி அறிவித்ததற்கு சிரோண்மனி அகாலி தளம் கடும் கண்டனம் தெரிவித்தது.

அதோடு, கமல்நாத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 பேருக்கு கமல்நாத் தனது வீட்டில் அடைக்கலம் தந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தினர். இதை ஏற்று, சீக்கிய கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அனுமதி வழங்கி உள்ளார். இது குறித்து அகாலி தள தலைவர் மன்ஜிந்தர் சிர்சா அளித்த பேட்டியில், ‘‘இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. சீக்கிய கலவர வழக்கில் புதிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். 2 சாட்சிகள் வாக்குமூலம் தர தயாராக உள்ளனர். இது குறித்து சிறப்பு விசாரணை குழுவிடம் நேரில் தெரிவித்துள்ளோம். அவர்கள் எங்களுக்காக நேரம் ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர்’’ என்றார். இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட இருப்பதால், கமல்நாத்தின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: