முக்கிய தலைவர்களை கைது செய்தால் காங். சிதறி ஓடிவிடும் இயக்கமல்ல : பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

சென்னை: முக்கிய தலைவர்களை கைது ெசய்தால் சிதறி ஓடும் இயக்கம் காங்கிரஸ் அல்ல என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அயனாவரத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜெயக்குமார் எம்பி, முன்னாள் எம்எல்ஏ யசோதா, ஹசினா சையத், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நளினி சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “ சிதம்பரம் சிறைச்சாலையிலேயே இருந்து விடுவார் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அப்படி அல்ல, சிறையில் இருந்து வரும் தலைவர்கள் தான் தங்களை இன்னும் தகுதிப்படுத்தி கொண்டு வருகின்றனர். சிறையில் இருந்து வந்த தலைவர்கள் தான் பின்நாளில் மக்கள் போற்றும் தலைவர்களாக வந்தனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை கைது செய்து விட்டால் காங்கிரஸ் கட்சியினர் சிதறி ஓடிவிடுவார்கள் என்று எண்ணுகின்றனர். ஆனால், நாங்கள் இது போன்ற சூழல் வரும் போது தான் ஒன்றுப்பட்டு வெளியே வருவோம். காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரியாமல் பலர் உள்ளனர்” என்றார். பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழாவில் பங்கேற்றவர்களுக்கு புஸ்ட் வழங்கப்பட்டது.

Related Stories: