எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்: வீடியோ வெளியீடு

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து  செய்தது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். அத்துடன், இந்த  மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கான மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த உத்தரவின் காரணமாக, காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் பாகிஸ்தானின் தாக்குதல் படையினர், எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்டறிந்த இந்திய ராணுவம் 5 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது. இந்நிலையில் இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: