புதுடெல்லி: தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். குஜராத் அருகே சர் கிரீக் பகுதியில் இருந்து ஆளில்லாத சில படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, தென் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கலாம் என வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.