வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்வது போன்று அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் காணப்படுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று வெயில் வறுத்தெடுத்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தார்.

குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என கூறினார். நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தேவாலாவில் 5 செ.மீ. மழையும், சின்னக்கல்லாறில் 3 செ.மீ., வால்பாறையில் 2 செ.மீ., பள்ளிப்பட்டு, பொள்ளாச்சி, நடுவட்டத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: