அம்பத்தூர் மண்டலத்தில் மின் விளக்குகள், காரிய மேடை அமைக்க ரூ.63 லட்சம் ஒதுக்கீடு: டி.ஆர்.பாலு எம்.பி தகவல்

அம்பத்தூர்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஏற்பாட்டில் அம்பத்தூர் மண்டல பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம், அம்பத்தூர் கே.கே ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அம்பத்தூர் பகுதியில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை முடிக்கவும், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கவும், அம்பத்தூர் சி.டி.எச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தவும், முக்கிய சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கவும், புதூர் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கவும், காரிய மேடை கட்டித்தரவும், ரேசன் கடை, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும், என மனு அளித்தனர்.

அப்போது, டி.ஆர்.பாலு, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ஒரகடம், ஆயிரம் காத்தம்மன் நகர், பாரதி நகர், திருவெங்கடநகர், மேனாம்பேடு, கள்ளிகுப்பம் வயர்லெஸ், சம்தாரியா நகர், ஐசிஎப் காலனி, செல்லியம்மன் கோயில், செல்லியம்மன் நகர், அத்திப்பட்டு சின்ன காலனி ஆகிய 12 இடங்களில் உயர்கோபுர விளக்குகள் தலா ₹4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உள்ளது. ஞானமூர்த்தி நகரில் ₹15 லட்சம் செலவில் காரிய மேடை அமைக்கப்படும். இதற்காக ₹63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Related Stories: