கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பாலம் இடியும் அபாயம்: உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

கன்னியாகுமரி: கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரால் கன்னியாகுமரி - காஷ்மீர் நான்குவழி சாலை திட்டத்திற்கு கன்னியாகுமரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில்  கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் நரிக்குளத்தை நிரப்பாமல் பாலம் அமைத்து சாலை பணியை நிறைவேற்றுமாறு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை பணி நிறைவடையாமல் இருந்தது.

இந்த வழக்கு முடிந்ததை அடுத்து குளத்தின் மேல் பாலம் அமைத்து சாலை பணியை நிறைவேற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி மத்திய அமைச்சர்கள்  நிதின்கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாலத்துக்கு அடிக்கல் நாட்டினர்.

500 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தில், 102 மீட்டரில் உயர்மட்ட பாலம், 10 மீட்டர் நீளம் கொண்ட 2 சிறு பாலங்கள், 1,500 மீட்டர் நீளத்தில் நடை பாதை  போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த கோடைக்காலத்தில் நரிக்குளம் வறண்டது. அப்போது விவசாயிகள் போர்வையில் மண் எடுக்க சிலர் அனுமதிபெற்று விதிமுறைகளை மீறி குளத்தில் பல இடங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டது. அதுபோல பாலத்தின்  தூண்கள் அமைந்துள்ள பகுதியிலும் கண்மூடித்தனமாக மண் அள்ளினர். ஆனால் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் பாலம் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தமிழ்முரசு படத்துடன் செய்தி வெளியிட்டது.

இதற்கிடையே  பாலத்தை ஒட்டிய பகுதியில் பலமுறை விரிசல்கள் விழுந்தன. பின்னர் அதிகாரிகள் தரப்பில் அது சீர்செய்யப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் நரிக்குளம் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் குளத்தில் இருந்து மண் அள்ளப்பட்டதால் பாலத்தின் தூண்களின் அடிப்பகுதி இருப்பு இருந்து வருவதால் பாலப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால்  பாலம் இடியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: