அரசு அறிவித்துள்ளபடி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு முழு ஒத்துழைப்பு

* தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை சம்பந்தமாக அரசு எடுக்கும்  முயற்சிகளுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள்,  திரையரங்கு உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்று  முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே இனி டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ்நாடு  திரையரங்கு மற்றும் மல்டிபிளஸ் திரையரங்கு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும்  கலந்து கொண்ட கூட்டு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

தமிழக அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இதில் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு, தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் ஓனர் அசோசியேஷன் தலைவர்  திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க செயற்குழு உறுப்பினர்  ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை சம்பந்தமாக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கமும் முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் டிக்கெட் தொடர்பாக இணையதள புக்கிங் நிறுவனம், பண பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்த உள்ளோம். அதில் பொதுமக்களுக்கு வசதியாக எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யலாம் என்பது பற்றி அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடத்தலாம் என்றும் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளோம். தமிழ் திரைப்பட தயாரிப்பு சம்பந்தமாகவும், திரையிடுவதில் உள்ள பிரச்னை சம்பந்தமாகவும் தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்கு உரிமையாளர் சங்கமும் கலந்து பேசி ஒருமித்த கருத்தாக அடுத்தவாரத்தில் தலைமை செயலகத்தில் அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் 100 சதவீத திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே இனி டிக்கெட் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை முதல் கடைகோடி கிராமம் வரை அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் மூலமே டிக்கெட் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொண்டுள்ளோம். கிராம மக்கள் இரண்டு விதமான டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விருப்பப்படுகிறவர்கள் அதன்மூலம் டிக்கெட் எடுக்கலாம். நேரடியாக தியேட்டரிலும்  டிக்கெட் வாங்கலாம். ஆனால் அந்த டிக்கெட்டும் அரசு மூலம் கண்காணிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் எடுத்தால் 30 அதிகமாகும். நேரில் வந்து டிக்கெட் எடுத்தால் இந்த கட்டணம் இருக்காது.

அடுத்த வாரத்தில் ஒருநாள் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசி ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் அரசிடம் வந்து மீண்டும் பேசுவோம். நடைமுறை சிக்கலுக்கு ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். பெரிய தியேட்டர்களை மூன்றாக பிரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். சிறிய படங்களும் அதிகநாட்கள் ஓடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: