யானைகவுனியில் உள்ள நகை பட்டறையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 61 சிறுவர்கள் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பூர்: யானைகவுனியில் உள்ள நகை பட்டறையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 61 வடமாநில சிறுவர்கள் மீட்கப்பட்டனர். சென்னை யானைகவுனி, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் அதிகளவில் நகை கடைகள், நகை பட்டறைகள்,  துணிக் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள்  இயங்கி வருகின்றன. இங்குள்ள  நகை பட்டறைகளில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் அதிகளவில் வேலை செய்வதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து அதிகாரிகள்  வால்டாக்ஸ் சாலை, யானைகவுனி பகுதிகளில் நேற்று  தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 5 நகை பட்டறைகளில் 61 வடமாநில சிறுவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார் காசிமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.  மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குடும்ப கஷ்டத்தின் காரணமாக அவர்களின் பெற்றோர்கள் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்தனர் என்று  அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து  யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை யார் அழைத்து வந்தனர் என்றும்,  இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் வடமாநில சிறுவர்கள் பணியில் உள்ளனர். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த சிறுவர்களை மீட்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: