விமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட அண்ணா, காமராஜரின் பெயர் பலகை மீண்டும் வைக்கப்படும்: திமுக எம்எல்ஏவிடம் அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், சர்வதேச முனையத்திற்கு  அண்ணா பெயரையும் கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சூட்டினார்.  பயணிகளின் விமான டிக்கெட்களிலும் இந்த பெயர்களே இருந்து வந்தன. ஆனால் 2013ம் ஆண்டு ₹2,0200 கோடி செலவில் புதிய உள் நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தபோது  காமராஜர், அண்ணா புகைப்படங்களை வைக்கவில்லை. அப்போதே தமிழக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து விமான டிக்கெட்டுகளில் காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கப்பட்டன. உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்கு டெர்மினல் 1, வருகை பகுதிக்கு டெர்மினல் 2 என்றும், சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதிக்கு டெர்மினல் 3 என்றும், வருகை பகுதிக்கு டெர்மினல் 4 என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விமான டிக்கெட்களிலும் அதுவே இடம் பெற்றன.

Advertising
Advertising

இந்நிலையில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று பிற்பகல் விமான நிலைய இணை பொது மேலாளர் நந்தக்குமார் மற்றும் விமான நிலைய மேலாளர் சரவணன் ஆகியோரை நேரில் சந்தித்தார்.பின்னர் இ.கருணாநிதி எம்எல்ஏ கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விமான நிலைய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டேன். விமான நிலைய விரிவாக்க பணி நடக்கிறது. ஒரு மாதத்தில் பணி முடிந்ததும் மீண்டும் படங்களை அதே இடத்தில் வைப்பதாக கூறினர். மேலும் அதிகாரிகள் என்னை நேரில் அழைத்து சென்று தலைவர்கள் படம் இருக்கும் இடத்தையும், வேலை நடக்கும் பகுதியையும் காண்பித்தனர். அதிகாரிகள் அளித்துள்ள உத்தரவாத்தின்படி மீண்டும் படங்கள் வைக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: