தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி பகுதியில் கிடப்பில் தரைப்பாலம் கட்டும் பணி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர்-அகரம் தென்பிரதான சாலையில், திருவஞ்சேரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மழைநீர் செல்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, அங்கு தரைப்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டது. இந்த பணி கிடப்பில் போடப்பட்டதால் சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள தரைப்பாலத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில் பல ஆண்டுகளாக மின்விளக்கு வசதிகள் இல்லாததால் சாலை முழுவதும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாலம் கட்டும் பணி நடைபெறுவது தெரியாமல் அதில் சிக்கி காயமடைகின்றனர்.

அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பாலம் கட்டும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “திருவஞ்சேரி பகுதியில் மழைநீர் செல்லுவதற்கு சரியான வழி இல்லாததால் மழை காலங்களில் இப்பகுதி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தோம். இந்நிலையில் மழைநீர் செல்வதற்காக இப்பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. ஆனால் பணிகள் முழுவதும் நிறைவடையாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் கிடப்பில் உள்ள சிறு பாலம் கட்டும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: