வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு 6491 பதவிக்கு 16.30 லட்சம் பேர் போட்டி: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு நடக்கிறது. 6491 பதவிக்கு 16.30 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 2688, தட்டச்சர், இளநிலை உதவியாளர் (பிணையம்)-104.வரிதண்டலர் (கிரேடு 1)-34, நில அளவர்-509, வரைவாளர்-74, தட்டச்சர்-1901, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3)-784 என மொத்தம் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 14ம் தேதி அறிவித்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சிதான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என  போட்டிப்போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தம் 16.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் குரூப் 4 பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 1ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் 301 தாலுகா மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net, www.tnpscexams.inல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை  டவுன் லோடு செய்வதில் ஏதேனும் சந்தேகம்  இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்வு கூடத்துக்கு செல்போன் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.

Related Stories: