சென்னை : சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் முத்துக்குமரன் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை வரும் 27ம் தேதி நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழக அரசு நீட்டில் இருந்து விலக்கு கோரிய நிலையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தரவில்லை. இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஜூன் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் மூலம் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். ஜூலை 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடந்தது.