பேரிகை அருகே குற்றவாளியை கைது செய்ய வந்த கர்நாடக போலீசார் மீது தாக்குதல்: மண்டை உடைந்து ஒருவர் படுகாயம்

சூளகிரி: பேரிகை அருகே குற்றவாளியை கைது செய்ய வந்த இடத்தில் கர்நாடக போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(35). இவர், பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்பேரில், பொம்மனஅள்ளி போலீசார், சங்கரை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எஸ்ஐ மஞ்சுநாத் தலைமையில் 4 போலீசார், தீர்த்தம் பகுதிக்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த சங்கரை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர்.

Advertising
Advertising

ஆனால், போலீசார் அனைவரும் மப்டியில் இருந்துள்ளனர். இதனால், சங்கரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து, நீங்கள் போலீஸ் இல்லை என தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில், இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், போலீஸ்காரர் ராமலிங்க கவுடா என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெரும் போராட்டத்திற்கு பின்பு ஒருவழியாக சங்கரை கைது செய்த கர்நாடக போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், காயமடைந்த போலீஸ்காரர் ராமலிங்க கவுடாவை மீட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் பேரிகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: