முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்): முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது பாஜ அரசு வழக்குகள் தொடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர் தலைமறைவு - தேடப்படும் குற்றவாளி என்று அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சிபிஐ அதிகாரிகளுக்கு கடமையை நிறைவேற்றிடும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவில் அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, சிதம்பரம் ஏதோ ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்துகொண்டதை, நடுநிலையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஜனநாயகவாதிகளும், அரசியல் சட்ட மாண்புகளை மதிப்போர்களும் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள். ஜனநாயகம் கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படக் கூடாது. சிறந்த சட்ட நிபுணரும், வழக்குரைஞருமான நண்பர் சிதம்பரம் சட்டப்படி இந்த பிரச்னையை எதிர்கொள்வார்.

Advertising
Advertising

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் அவரது வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கைது செய்து, சிபிஐயின் கட்டுப்பாட்டில் அடைத்து வைத்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நேர்மையற்ற பழிவாங்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளது. அவசர கதியில் அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, பயங்கரவாதியை கைது செய்வது போல சுற்றிவளைத்து கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். பதவியிலிருக்கும் போது தவறுகள் இழைக்கப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்டவர் யாராயிருப்பினும் அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு கைது செய்வது தவறானதல்ல. ஆனால், ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கும் விதம் மற்றும் அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்பதில் காட்டப்பட்டிருக்கும் தீவிரம் அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையே ஆகும். எதிர்கட்சி தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜ அரசு சட்டநியதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

திருமாவளவன் எம்.பி. (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை இந்த அரசு தனது ஏவல் ஆட்களாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தன் பெயரோ தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்த சிதம்பரம்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் செய்தியாளர்களிடம் விவரித்தார். ‘உயிரா, சுதந்திரமா? எனத் தம்மிடம் கேட்கப்பட்டால் தான் சுதந்திரத்தைத்தான் தேர்வு செய்வேன்’ என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் வீட்டுக்குள் இருப்பது தெரிந்திருந்தும் ஊடகவியலாளர்கள் கண்முன்னாலேயே சிபிஐ அதிகாரிகளும், வருமானவரித்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர். வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்துக்கொண்டு சில சிபிஐ அதிகாரிகள் உள்ளே வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி தேவையில்லாமல் அவரை அவமானப்படுத்திக் கைது செய்துள்ளனர். இது இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். விசாரணையின்போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்,  அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப.சிதம்பரத்தை  பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ப.சிதம்பரம்  கருத்துக்கு கருத்தியல் ரீதியாகப் பதில் கூற திராணியற்ற மோடி அரசின் கோழைத்தனமான செயல் ஆகும்.

Related Stories: