மகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினி பரோல் மேலும் 3 வாரம் நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி  தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 6 மாதம் பரோல் வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பரோல் கேட்டு அவர் மனுதாக்கல் செய்தார். வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நளினி ஒரு மாதம் பரோலில் கடந்த மாதம் 27ம் தேதி சென்றார். வேலூரில் தங்கியிருக்கும் அவர் பரோல் காலம் முடிந்து வருகிற 25ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டும்.  இந்நிலையில, தங்களது உறவினர்கள் பலர் இலங்கையில் இருப்பதால் அவர்கள் வந்த பிறகுதான் மகளுக்கு மாப்பிள்ளை பேச முடியும். எனவே, திருமண ஏற்பாடுகள் முடியாததால் பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்தார்.

Advertising
Advertising

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ், 30 நாட்கள் பரோல் கேட்ட நளினி மனுவை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதை எதிர்த்து நளினி செய்த மேல்முறையீடு தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார். இதையடுத்து, நீதிபதிகள், 30 நாட்கள் நளினி பரோலில் இருந்தபோது அவர் விதிகளை மீறி ஏதாவது செயல்பட்டாரா, வேறு ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா  என்று கேட்டனர். அதற்கு அரசு வக்கீல் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள், மகளின் திருமண ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று நளினி கூறுவதால், அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோலை நீட்டிக்கிறோம் என்று  உத்தரவிட்டனர்.

Related Stories: